ஒட்டு போட்ட கால்சட்டை

வாங்கி வராத
கணக்கு நோட்டிற்காய்
அடிவாங்கிய போதெல்லாம்
அப்பாவை சபித்திருக்கிறேன்

ஒட்டு போட்ட
கால்சட்டயின்
கிழிசலை மறைப்பதிலேயே கழியும்
தோழிகளுடனான எனது நட்பு

பள்ளியற்ற மதியங்களில்
நிம்மதி பெருமூச்சி விடுவேன்
தயிர்சாதம் குறித்த கேலியில் இருந்து
தப்பித்ததாய்

இடை வேளையில்
வெளியே செல்லாமல்
ஏதோ ஒரு புத்தகத்தை
புரட்டி கொண்டிருப்பேன்
நொறுக்குகள் வாங்க காசற்றவனாய்
காட்டிகொள்ளாமல்


ஓடியாடி விளையாடும்
நண்பர்களோடு சேராமல்
ஒதுங்கியே நிற்பேன்
நைந்து போன ஒற்றை சட்டையும்
கிழிந்து விடுமோ என்ற பயத்தில்


எல்லோரையும் போல்
ஆண்டு விடுமுறையை
அவ்வளவாய்
எதிர்ப்பார்க்க மாட்டேன்
ஏதோ ஒரு கடையில்
எடுபிடியை சேர்வதில்
எனக்கு சம்மதமில்லை

இத்தனையும் தாண்டி
தேர்வில்
வெற்றிபெற்று விடுவேன்
அப்பா மேய்க்க
விடுவதாய் சொன்ன
'பன்றி' களுக்கு பயந்தே ...

இதயக் கோளாறு

கூரைல்
கூடு கட்டும்
குருவிகள் கேட்பதில்லை
வீட்டுக்காரனின் சாதியை

சங்கங்கள் ஏதுமற்ற
காக்கைகள் உண்கின்றன
பிடி சோற்றையும்
பங்கிட்டு

கோபுரத்தில் அடங்கி
தேவாலயத்தில் அமர்ந்து
பள்ளிவாசலில் பருக்கை உண்ணும்
புறாக்களுக்குள் எந்த
சண்டையும் இல்லை

கணேசனின் கண்கள்
பீட்டருக்கும்
முருகனின் ரத்தம்
முகமதுக்கும்
பொருந்திய பிறகும்
பொருந்த மறுக்கிறது

சிலரது இதயம் மட்டும் ...

வெளிவராத கவிதைகள்

ஒரு விழா முடித்து
மறு விழா செல்வதற்குள்
கருத்து போகும் நகைகள்
குறித்து
அம்மாவின் கவலை .

எங்கோ சந்தையில்
எதிர்பட்ட
தன் பால்ய சிநேகிதன்
அணிந்து வந்த
ஐவிரல் மோதிரமும் வண்டியும்
அப்பாவின் தூக்கத்தை பறித்தது .

தங்கைக்கு
தலைமுடி உதிர்வது குறித்த
வருத்தம் .

வெளி வராத
என் கவிதைக்காக
நான்தான் வருந்த வேண்டும் ...

பொருளோடு புன்னகைக்கிறது பூமி

இங்கு எல்லாமே
பொருளாலாகி விட்டது

அன்பையும் உறவுகளையும் கூட
பொருள்களே திர்மானிக்கின்றன

பொருளற்ற உயிர்களை
இங்கு எவரும்
பொருட்படுத்துவதில்லை

பொருளோடு உறங்கி
பொருளோடு விழித்து
பொருளோடு புன்னகைக்கிறது பூமி

இங்கு வாழ்க்கை என்பதே பலருக்கு
பொருள் தேடி அலையும் போராட்டம் .

இயற்கை வாசிகள்

அத்தனை சத்தத்திலும்
எப்படியோ உறங்கி விடுகிறார்கள்
சாலை வாசிகள்

எந்த
மென் படுக்கை விரிப்பும்
போர்வையும்
அவர்களின்
தேவையாய் இல்லை

மின் விசிறிகளை நாடாத
அவர்களின் தூக்கம்
மிகவும் எளிதாய் உள்ளது

மழை ,வெயில் யன
வாழ்வின் எந்த கணத்தையும்
மிகச் சாதாரண மாக
எதிர் கொள்கிறார்கள்

எந்த மின்சாரத்தாலும்
துண்டு படுத்த முடிவதே இல்லை...

அவர்களின் கனவை .

உன்னைப் போல் ...

கடைசியாய் நீ தந்த
காதல் கடிதத்தையும்
கிழித்தெறிந்து விட்டேன்

உன் நினைவுகளும்
மெல்ல மெல்ல
இதயத்தை விட்டு
வெளி நடப்பு செய்தன

உன் மிதான என் காதலும்
ஒரு அதிகாலை கனவாய்
நடக்கும் என்ற ஆசையோடு முளைத்து
நடக்காமலே கானலாகி விட்டது

மீண்டும் மீண்டும்
நினைவு கூர்ந்தும்
அதன் பக்கங்களை முழுவதுமாய்
என்னால் வரைய முடிய வில்லை

உன்னை போல
நானும் பழகிகொண்டேன்
வந்தவளிடம் சிரித்து பேசவும்
இரவில் புன்னகையோடு
என்னை பகிர்ந்து கொள்ளவும் .

பொம்மைகளோடு

அன்னையின் முந்தானைப்பற்றி
உறங்கிய என் இரவுகள்
முத்தங்களோடு விடியும் ,

தாத்தாவின் கொஞ்சல்களும்
அத்தைகளின் கேலிகளும்
எனக்கு சிறகுகளை
பூட்டி விடும் ,

மாமாவின் கரம் பற்றி
தெருவில் வலம் வருவேன் ,

குரங்குக்கோ நாய்க்கோ
தரும் முன்னே
எல்லா சோற்றையும்
நானே உண்பேன் ,

பாட்டியின் கதைகளே
எனை தாலாட்டி
உறங்க வைக்கும் .

எல்லாம் ஒரு கனவுப்போல்
ஓடி மறைகிறது
இன்று ,
நகரத்தின் இந்த
நாலு சுவற்றுக்குள் நான் ...

என் குழந்தை விளையாடுகிறான்
பொம்மைகளோடு ...

நகரத்தின் கதவுகள்

எப்போதும் சாத்தியே கிடக்கிறது

நகரத்தின் கதவுகள்

செய்தி தாளுக்கோ பால் பாக்கெட்டுக்கோ

திறக்கப்படும் அவை

சட்டென அறைந்து சாத்தப் படுகிறது

எவர் முகத்திலாவது .

சக்கரை அரிசி என

உறவை எடுத்து செல்லும்

டம்பளர்கள் இங்கு

எவரிடமும் இல்லை .

தொலைகாட்சி சிறப்பு

நிகழ்ச்சிகளால் மட்டுமே

அடையாளப்படுகிறது ,

இனிப்பை பரி மாரிக்கொல்லாத

இவர்களின் பண்டிகைகள் ...

எப்போதாவது ஒலிக்கும் அழைப்புமணி

கடிதங்களுடனோ எரிவாயு வுருளையுடனோ

உறவு தவிர்த்த எதனுடனும்

காத்து நிற்கிறது ....

கூப்பிட்ட குரலுக்கு

ஊர் கூடிய தெருக்களில்

கான்கிரிட் சுவர்கள் முளைத்து

சிறையாகிவிட்டன இதயங்கள்

நகரத்தின் கதவுகளுக்குள் .

உன்னை காதலிக்க துவங்கிய பிறகு
பொய் பேச கூடாதென்றால்
பொய் பேசாமல்
எப்படித்தான் காதலிப்பது ...

நான்,

அதிகம் சுற்றுகிற கோவிலாகவும்

அதிகம் வேண்டுகிற தெய்வமாகவும்

இருக்க முடிகிற உன்னால்

ஏன் வரங்களை மட்டும்

தாரளமாய் தரமுடிவதில்லை ....

உன்னை முதலில் பார்த்தபோது

சிற்பம் என நினைத்தேன்...

பின்புதான் தெரிந்தது

நீ சிற்பமல்ல சிற்பி ,

எனை ஒவ்வொருநாளும் செதுக்குகிறாய்...

பிப்ரவரி பதினான்கு
காதலர் தினமாம் ...
அன்று தானே உன்னை
முதலில் கண்டேன்
அதற்குள் யார் அறிவித்தது
அதை காதலர் தினமென்று ...

எதையும் எதிர்ப்பார்த்து
நான் உன்னை காதலிக்கவில்லை
என்றாலும்
நான் எதிர் பார்ப்பதெல்லாம்
எப்போதும் உன் காதலை தான் .

எனை ஒவ்வொரு நாளும் செதுக்குகிறாய்..என்னும் என் முதல் தொகுப்பில் வெளியான கவிதைகள சில...

எத்தனையோ பெண்கள்
அழகாய் இருக்கலாம்
ஆனால் நீதான் என்னை
அழகாக்கியவள்.

என்னால் சொல்லமுடியாத
எவ்வளவோ காதலை நீ
சாதாரணமாய் சொல்லி விடுகிறாய் ...
உன் ஒரு பார்வையில்.

திசை மறந்த ஒரு பட்டாம்பூட்சியாய்
திசை எட்டும் முட்டுகிறேன்
எனக்கான கதவை திறக்க போகும் கைகள்
எவர் கைகளோ ...