ஏதேனும் ஒரு நாளையேனும்...

ஏதேனும் ஒரு நாளையேனும்
எனதாய் எடுத்தாளவேண்டும்

உருண்டு கிடக்கும்
எண்ணப் பந்துகளை
உதைத்தாடி
முடிவு குறித்தான
திட்டமிடுதல்களற்று
முனைந்து பார்க்க வேண்டும்
ஒரு முறையேனும்

தாழிடப்பட்ட
இமைகளுக்குள்ளிருந்து
கண்களை விடுவிக்கவும்

தேவைகளின் சுமை கருதி
இயக்கிய உறுப்புகளை
அதன் பொருட்டில் இயங்கவிட்டு
அழகு பார்க்கவும்

இதய துடிப்பின்
தாளலயத்தில்
மூச்சு பாடலொன்றை
முழுமையாய் ரசிக்கவும்

ஏதேனும் ஒரு நாளையேனும்
எனதாய் எடுத்தாளவேண்டும்

மேலும்
எப்போதும் சுமந்து திரியும்
சில சிலுவைகளை
இறக்கி வைத்து
உயிர்த்தெழ வேண்டும்
ஒரு நாளையேனும்...


இதழ் இயல்

முத்தங்களை சேமித்து வைக்கும்
உண்டியலிருந்தால்
உன் முத்தங்களை சேமித்து வைத்து
நீ இல்லாத நாட்களில்
செலவு செய்து கொள்வேன்
ஆனால் அப்படி ஒரு
உண்டியல் இல்லையே...
சரி பரவாயில்லை
நீதான் ஊருக்கு போகையில்
பிரியும் நாட்களுக்கும் சேர்த்தே
கொடுத்து விட்டு போகிறாயே ...


இனிமேல்,
என்னை அருகில் வைத்துக்கொண்டு
எந்த குழந்தைக்கும் முத்தமிடாதே...
அது குழந்தை என்பதைகூட மறந்துவிட்டு
எதிரியாய் பார்க்கிறேன்


முத்தம் கேட்கும் போதெல்லாம்
மாட்டேன் என்கிறாயே
எதற்கு
நான் கெஞ்சவேண்டும் என்றா...
இல்லை கொஞ்சவேண்டும் என்றா...
ஒருவேளை நான்,
முத்தங்களே கேட்கவில்லையென்றால்
நீ முத்தங்களை வைத்துக்கொண்டு
என்னசெய்ய போகிறாய்...

அந்த கடலையோ மழையையோ
குடித்து விடவா
என்னசெய்ய சொல்
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம்
காயும்முன்
ஏதாவது செய்ய வேண்டும்.


உனக்கு எப்போது
பரிசு கொடுப்பதென்றாலும்
நான் முத்தங்களையே
பரிசாய் தருகிறேன்
உன் காதலுக்கு பதிலாய்
என் காதலையே கொடுப்பதை விட
வேறென்ன பெரிதாய்
என்னால் தந்துவிட முடியும்.

கடந்தகாலத்தை தவிர

எத்தனை வலியிலும்
நகர்கிறது வாழ்க்கை

முந்தைய வலிகளையும்
நேற்றைய கண்ணீரையும்
இன்றைய புன்னகை
எப்படியோ
மறைத்து விடுகிறது

அடுத்த வேளை உணவுக்கும்
நிச்சயமற்ற வாழ்வில்
நாளைய விழிப்பென்பதும்
கேள்விக்குறியே !

உண்பதும் உறங்குவதுமாய்
கழியும் காலத்தில்
எதை பதிவு செய்தோம்
கடந்த காலத்தை தவிர...

இருந்தும் எதற்கோ
இந்த வாழ்க்கை
எதை நோக்கியோ
நகர்ந்துகொண்டு...

ஒற்றை வரியேனும்...

ஒற்றை வரிகூட
எழுவதில்லை...
ஊருக்கு சென்ற பின்

அதிகாலை தரும்
அம்மாவின் தேநீர்
அலுப்புகளையும் சுகமாக்கி
எழுப்புகிறது

பிரிவு செய்திகளை
பிரியமுடன் கேட்கும் அப்பா
இறக்கி விடுகிறார்
நீண்ட நாளைய கனங்களையும்

சுவர்களுக்குள் அடைபடாத
காலைக்கடன்கள்
ஆற்று மீன்களோடு
ஆனந்தமாய் நீந்துகிறது

திசையெங்கும்
அறிந்த முகங்களின்
அன்பு தழுவலில்
அடைப்புகள் உடைபட்டு
அருவியாய் பெருகுகிறது
அன்பு வெள்ளம்

நகரத்து வறுமையும்
தனிமையின் சூன்யமும்
கிராமத்து மயானத்திலும்
காணக் கிடைப்பதில்லை

விடுமுறை திர்ந்தபின்
விடியும் முன் கிளம்பி
அம்மாவின் அறிவுரைகளோடு
பேருந்தின் இருக்கைபிடித்து
உறக்கத்தோடே அமர்ந்தாலும்

உள்ளிருந்து எழுகிறது
ஒற்றை வரியேனும்...