ஏதேனும் ஒரு நாளையேனும்...

ஏதேனும் ஒரு நாளையேனும்
எனதாய் எடுத்தாளவேண்டும்

உருண்டு கிடக்கும்
எண்ணப் பந்துகளை
உதைத்தாடி
முடிவு குறித்தான
திட்டமிடுதல்களற்று
முனைந்து பார்க்க வேண்டும்
ஒரு முறையேனும்

தாழிடப்பட்ட
இமைகளுக்குள்ளிருந்து
கண்களை விடுவிக்கவும்

தேவைகளின் சுமை கருதி
இயக்கிய உறுப்புகளை
அதன் பொருட்டில் இயங்கவிட்டு
அழகு பார்க்கவும்

இதய துடிப்பின்
தாளலயத்தில்
மூச்சு பாடலொன்றை
முழுமையாய் ரசிக்கவும்

ஏதேனும் ஒரு நாளையேனும்
எனதாய் எடுத்தாளவேண்டும்

மேலும்
எப்போதும் சுமந்து திரியும்
சில சிலுவைகளை
இறக்கி வைத்து
உயிர்த்தெழ வேண்டும்
ஒரு நாளையேனும்...


1 கருத்துகள்:

பாலா சொன்னது…

இயந்திர சூழலில் சிக்கிக்கொண்ட வாழ்க்கையில் இது சாத்தியமா ?? (!)இனியவன்

கருத்துரையிடுக