எச்சரிக்கையாய் இரு

எனதாய் இல்லை
என் வாழ்வின்
எந்த நொடியும்...

ஏதோவொரு முகமூடிக்குள்
எப்போதும் நான்

ஒரு கைதேர்ந்த
நடிகனைப்போல்
எல்லா சுழலிலும்
என்பங்கை மிகச்சரியாய்
பூர்த்தி செய்கிறேன்

உள்ளுக்குள்
துரத்தி கொண்டே இருக்கிறது
காரணமற்ற ஏதோவொரு பயம்

யாருமற்ற தனிமைகளில்
என்னோடு பேசும்
என் சுயம் சொல்கிறது...

எச்சரிக்கையாய் இரு
"இங்கு
உன்னைப்போல் பலர் உண்டு !"

உயரங்களை பழகுகிறேன்...

புதிதாய் பறக்க
கற்றுக் கொள்ளும்
குஞ்சு பறவையின்
சிறகுகளோடு மெல்ல
சிறகடித்து பழகுகிறேன்...
வாழ்க்கையை

சரிவுகளில் எளிதாய்
பயணப்படும் சிறகுகள்
உயரங்களில் மட்டும்
கேலிக்குள்ளாகிறது

மெல்ல
கிளைவிட்டு கிளைதாவி
உயரங்களை பழகுகிறேன்

ஒருபோதும்
என்சிறகுகள்
ஓய்ந்து போவதில்லை...

நாளை வானையே
அளக்கும் சிறகுகள்
நம் வசமாகலாம்
என்ற நம்பிக்கையோடு!

அன்று
புள்ளியாய்கூட போகலாம்
கேலிசெய்த உயரங்கள்.

உணர்ச்சி


(தென்னகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவியரங்கில் கலந்து கொண்டு "உணர்ச்சி" என்னும் தலைப்பில் நான் வாசித்த, சிறந்த கவிதைக்கான முதல் பரிசை பெற்ற கவிதை...)

இல்லாத ஒன்றை ஏனோ
இன்றைக்கு தலைப்பாய் தந்தீர்
தலைப்பிலாவது இருக்கட்டுமென்று
தலைவா நீ நினைத்திரோ!

உணர்ச்சி என்ற எங்கள் மூச்சை
என்றைக்கோ நிறுத்தி விட்டோம்
இன்றைக்கு இருப்பதெல்லாம்
நடமாடும் பிணங்கள்தான்

செத்து மடியும்
பிணங்கள் பார்த்தே
சொரணையின்றி
சோத்தை உண்போம்

பணத்தை கொஞ்சம்
அதிகம் தந்தால்
தாயைகூட மனைவி என்போம்

அன்னையவள் முலையறுத்தே
அன்னியவன் நடந்தாலும்
அறிக்கைதான்
நாங்கள் விடுவோம்

உணர்ச்சியாவது
மண்ணாவது...

காசுக்கு எதையும் தின்னும்
வாக்காளர் எங்கள் மக்கள்...
பதவிக்கு கட்சி மாறும்
தலைகளே எங்கள் தலைகள்...

தேசத்தை அடகு வைத்தும்
தேவையானால்
வாங்கி தின்போம்
தேர்தலை கண்டால் மட்டும்
எங்கிருந்தோ
உணர்ச்சி கொள்வோம்

ஆட்சியை பிடிக்கும் வரை
ஆத்திரம்கூட அதிகம் வரும்
ஆட்சியை பிடித்து விட்டால்
மூத்திரம்கூட வருவதில்லை

வெள்ளையனின் வேரறுக்க
வீறு கொண்டதெங்கள் உணர்ச்சி...
சுதந்திரத்தை பெற்ற பின்னே
சுதந்திரமாய் தூங்குகிறது

உணர்ச்சி இன்று
எவர்க்கும் இல்லை
உணர்ச்சி இன்று
எதற்கும் இல்லை

எந்த தலை பேசினாலும்
எதற்கும் கைகள் தட்டி வைப்போம்
எங்கு கூட்டம் கூடினாலும்
நூறில் ஒன்றாய்
அங்கும் நிற்போம்

எவன் செத்தால்
எனக்கென்ன
என் தலை உள்ளதென்போம்
பேச்சிக்கு மட்டும்தான்
எங்கள் ரத்தம்
என்று சொல்வோம்

இல்லாத ஒன்றை ஏனோ
இன்றைக்கு தலைப்பாய் தந்தீர்
தலைப்பிலாவது இருக்கட்டுமென்று
தலைவா நீ நினைத்திரோ!

வாய்ப்புக்கு நன்றி...
வருத்தங்களோடு இனியவன்.

அம்மா

அத்தனை தெய்வங்களையும்
துணைக்கழைத்து
அப்பாவை வழியனுப்புவாள்

எதோ முனுமுனுத்தவாறே
வீட்டுக்குள் நுழையுமவள்
இருக்கும் உணவை
எல்லோருக்கும் கொடுத்து விட்டு
இன்றெனக்கு பசிஇல்லை என்பாள்

பின் அரிசியில்
கல் பொறுக்கியவாறே
உமிகளோடு சேர்த்து
உறவுகளையும் தூற்றுவாள்

மதியம் வெயில் என்றும் பாராமல்
காட்டில் விறகு பொறுக்கி
கருத்துபோய் வீடு வருவாள்

மாலைநேரம் ஆகிவிட்டால்
வாசலில்
வீதி பார்த்து அமர்வாள்

வாடிய முகத்தோடு
வீடுவரும் அப்பாவிடம்
காலையில் எதிர் வந்த
எவளோ ஒருத்தியை
சபித்து கொண்டிருப்பாள்.

ஒவ்வொரு மாலையும்
அப்பா வீடு திரும்பிய பின்
ஏற்றப்படும் உலையில்
கொதித்து கொண்டிருப்பாள்...

வருமானமற்ற
அன்றைய நாளின்
தவிப்போடு!

சுதந்திரம்

(நான்கு வருடம்களுக்கு முன்பு சுதந்திரம் என்னும் தலைப்பில் நான் எழுதிய கவிதை )

எங்கள் குடிசைகளுக்குள்
குணமுண்டு பணமில்லை

எங்கள் குடல்களுக்குள்
பசியுண்டு உணவில்லை

எங்கள் இரவுகளில்
நிலவு பாட்டியுண்டு
வடைதானில்லை

நட்சத்திரங்கள்
எங்கள் வீட்டு கூரையின்
போத்தல்கள்

சுதந்திர தினங்கள்
எங்கள் பிள்ளைகளின்
நாக்கடியில் மிட்டாய்கள்

இரவில் வாங்கினார்களாம்
எங்களுக்கு தெரியாது
உரிமை கொடுத்தார்களாம்
எங்களுக்கு கிடையாது

முதுகெலும்பு வளைந்தாலும்
முப்பது ரூபாய்தான்
வேர்வை வழிந்தாலும்
இருபது ரூபாய்தான்
பாதகங்கள் தேய்ந்தாலும்
பத்து ரூபாய்தான்

கேட்டாலும் கிடைக்காது
எடுத்தவன் உயிர் இருக்காது

இறக்கி வைத்தோம்
மாடிகளை
தாடிகள்தான்
எங்கள் சொத்து

உழுது விளைத்தோம்
உணவுகளை
பட்டினிதான்
எங்கள் சொத்து

நெய்து கொடுத்தோம்
ஆடைகளை
கிழிசல்கள்தான்
எங்கள் சொத்து

சுதந்திர வாசம்
இங்கு இல்லை
சாக்கடை நாற்றங்க்களே
நாங்கள் அறிவோம்

சுதந்திர மெத்தை
இங்கு இல்லை
சாணித் தரைகளே
எங்கள் கனவு

கல்வி கொள்ள ஆசைதான்
காசு பணம் இல்லையே
நெல்லுச்சோறு கனவுதான்
நேரம் அமையவில்லையே

இருட்டில் வாங்கியதை
பிரித்து கொண்டார்கள்
எங்களுக்கு தெரியாமல்
சுதந்திரம் என்பதை
காதில் சொன்னார்கள்
கண்ணில் காட்டாமல்

எழ நினைத்தோம்
காலில் அடி
உரிமை கேட்டோம்
உடலில் ரத்தம்
அழ நினைத்தோம்
கண்ணீர்த்துளி ...

சுதந்திரம் கிடைத்தது
"சத்தமில்லாமல் அழ"...
விடுமுறைகள் கூட
சுமையாகி விட்டது ...
உன்னை காதலிக்க துவங்கிய பின்.


என்னிடத்தில் இருக்கும்போது
குழந்தையாகவும்
எவராவது வந்து விட்டால்
குமரியாகவும்
மாறிவிடுகிற வித்தையை
எங்கு கற்றாய் நீ ?
நீ என்னை அடிப்பது
எனக்கு வலிப்பதற்க்காகவா
இல்லை,
என்னை தொடுவதற்க்ககவா...
எப்போதும் சிரித்து கொண்டே அடிக்கிறாயே
அடிப்பவர் சிரித்துகொண்டா அடிப்பார் ?
அந்த பூங்காவின் புல்தரை மீது
ஆசையாய் நடந்து போகிறாய் ,
பூங்காக் காவலன் ஓடிவந்து
அதன்மேல் நடக்காதிர்கள்
புல் நசுங்கி விடும் என்கிறான்...
மடையன் ,
அவனுக்கென்ன தெரியும்
அன்று உன் பாதங்கள் நசுங்கியது .
உனக்காக நான் எதையும் செய்வேன்
என்றாலும் ,
எதைநான் செய்வது ...
எதை செய்தாலும்
உனக்கு வலிக்கிறதே !


ஒருவேளை நான் உன்னை
காதலித்திருக்கா விட்டால்
துன்பங்களிலிருந்து தப்பித்திருக்கலாம்
ஆனால் இப்படி
துணாக இல்லாமல்
துரும்பாகவே இருந்திருப்பேன் .
அந்த கடலையோ மழையையோ
குடித்து விடவா
என்ன செய்ய சொல்
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் காயும்முன்
எதாவது செய்ய வேண்டும் .
வேர்க்காத முகத்தை கூட
அடிக்கடி துடைத்து கொள்கிறேன் ...
நீ கொடுத்த கைக்குட்டை என்பதால் .
உன்னை காதலிக்க துவங்கியது முதல்
என் அழகு கூடிக்கொண்டே வருகிறது
என்றாலும் ,
எனக்கு அதில் வருத்தம் தான்
எப்போதும் என்னை விட
நீயே அழகாய் இருக்க வேண்டும் .
குறும்பு செய்யும் போதெல்லாம்
நீ செல்லமாய் அடிக்கிறாய்
உன்னிடம் செல்லமாய் அடிவாங்கவே
நான் குறும்புகள் செய்கிறேன் ...

நீ கொடுத்த பரிசொன்றை

வீட்டில் சென்று பிரித்து பார்த்தேன்

அதில் செயற்கை இதயம் ஒன்று

'நான் உன்னை காதலிக்கிறேன் '

'நான் உன்னை காதலிக்கிறேன் ' யன

சொல்லிக்கொண்டே இருக்கிறது ...

நீ மட்டும் தான்

என்னை காதலிக்கிறாய் என நினைத்தேன்

அனால் ,

நீ தரும் பரிசுகள் கூட

என்னை காதலிக்கின்றன .

உன் விரலில் வைத்த மருதாணியை
எடுத்து எறிந்து விட்டு நீயோ
விரலை பார்த்து கொண்டிருக்கிறாய் ...
நானோ,
நீ எடுத்து எறிந்த மருதாணியை
பார்க்கிறேன் ...
உன் விரல் பட்டு அது சிவந்து உள்ளதா என .