அம்மா

அத்தனை தெய்வங்களையும்
துணைக்கழைத்து
அப்பாவை வழியனுப்புவாள்

எதோ முனுமுனுத்தவாறே
வீட்டுக்குள் நுழையுமவள்
இருக்கும் உணவை
எல்லோருக்கும் கொடுத்து விட்டு
இன்றெனக்கு பசிஇல்லை என்பாள்

பின் அரிசியில்
கல் பொறுக்கியவாறே
உமிகளோடு சேர்த்து
உறவுகளையும் தூற்றுவாள்

மதியம் வெயில் என்றும் பாராமல்
காட்டில் விறகு பொறுக்கி
கருத்துபோய் வீடு வருவாள்

மாலைநேரம் ஆகிவிட்டால்
வாசலில்
வீதி பார்த்து அமர்வாள்

வாடிய முகத்தோடு
வீடுவரும் அப்பாவிடம்
காலையில் எதிர் வந்த
எவளோ ஒருத்தியை
சபித்து கொண்டிருப்பாள்.

ஒவ்வொரு மாலையும்
அப்பா வீடு திரும்பிய பின்
ஏற்றப்படும் உலையில்
கொதித்து கொண்டிருப்பாள்...

வருமானமற்ற
அன்றைய நாளின்
தவிப்போடு!

1 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் சொன்னது…

எதோ முனுமுனுத்தவாறே
வீட்டுக்குள் நுழையுமவள்
இருக்கும் உணவை
எல்லோருக்கும் கொடுத்து விட்டு
இன்றெனக்கு பசி இல்லை என்பாள்

அப்பா என்று சொல்லும்போது கூட மூச்சு சிறிது நேரம் நிற்கும் ஆனால் அம்மா என்று சொல்லும்போதுதானய்யா சுவாசம் சீராக வெளிப்படும். நம் சுவாசம் அவள்

கருத்துரையிடுக