உணர்ச்சி


(தென்னகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவியரங்கில் கலந்து கொண்டு "உணர்ச்சி" என்னும் தலைப்பில் நான் வாசித்த, சிறந்த கவிதைக்கான முதல் பரிசை பெற்ற கவிதை...)

இல்லாத ஒன்றை ஏனோ
இன்றைக்கு தலைப்பாய் தந்தீர்
தலைப்பிலாவது இருக்கட்டுமென்று
தலைவா நீ நினைத்திரோ!

உணர்ச்சி என்ற எங்கள் மூச்சை
என்றைக்கோ நிறுத்தி விட்டோம்
இன்றைக்கு இருப்பதெல்லாம்
நடமாடும் பிணங்கள்தான்

செத்து மடியும்
பிணங்கள் பார்த்தே
சொரணையின்றி
சோத்தை உண்போம்

பணத்தை கொஞ்சம்
அதிகம் தந்தால்
தாயைகூட மனைவி என்போம்

அன்னையவள் முலையறுத்தே
அன்னியவன் நடந்தாலும்
அறிக்கைதான்
நாங்கள் விடுவோம்

உணர்ச்சியாவது
மண்ணாவது...

காசுக்கு எதையும் தின்னும்
வாக்காளர் எங்கள் மக்கள்...
பதவிக்கு கட்சி மாறும்
தலைகளே எங்கள் தலைகள்...

தேசத்தை அடகு வைத்தும்
தேவையானால்
வாங்கி தின்போம்
தேர்தலை கண்டால் மட்டும்
எங்கிருந்தோ
உணர்ச்சி கொள்வோம்

ஆட்சியை பிடிக்கும் வரை
ஆத்திரம்கூட அதிகம் வரும்
ஆட்சியை பிடித்து விட்டால்
மூத்திரம்கூட வருவதில்லை

வெள்ளையனின் வேரறுக்க
வீறு கொண்டதெங்கள் உணர்ச்சி...
சுதந்திரத்தை பெற்ற பின்னே
சுதந்திரமாய் தூங்குகிறது

உணர்ச்சி இன்று
எவர்க்கும் இல்லை
உணர்ச்சி இன்று
எதற்கும் இல்லை

எந்த தலை பேசினாலும்
எதற்கும் கைகள் தட்டி வைப்போம்
எங்கு கூட்டம் கூடினாலும்
நூறில் ஒன்றாய்
அங்கும் நிற்போம்

எவன் செத்தால்
எனக்கென்ன
என் தலை உள்ளதென்போம்
பேச்சிக்கு மட்டும்தான்
எங்கள் ரத்தம்
என்று சொல்வோம்

இல்லாத ஒன்றை ஏனோ
இன்றைக்கு தலைப்பாய் தந்தீர்
தலைப்பிலாவது இருக்கட்டுமென்று
தலைவா நீ நினைத்திரோ!

வாய்ப்புக்கு நன்றி...
வருத்தங்களோடு இனியவன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக