சுதந்திரம்

(நான்கு வருடம்களுக்கு முன்பு சுதந்திரம் என்னும் தலைப்பில் நான் எழுதிய கவிதை )

எங்கள் குடிசைகளுக்குள்
குணமுண்டு பணமில்லை

எங்கள் குடல்களுக்குள்
பசியுண்டு உணவில்லை

எங்கள் இரவுகளில்
நிலவு பாட்டியுண்டு
வடைதானில்லை

நட்சத்திரங்கள்
எங்கள் வீட்டு கூரையின்
போத்தல்கள்

சுதந்திர தினங்கள்
எங்கள் பிள்ளைகளின்
நாக்கடியில் மிட்டாய்கள்

இரவில் வாங்கினார்களாம்
எங்களுக்கு தெரியாது
உரிமை கொடுத்தார்களாம்
எங்களுக்கு கிடையாது

முதுகெலும்பு வளைந்தாலும்
முப்பது ரூபாய்தான்
வேர்வை வழிந்தாலும்
இருபது ரூபாய்தான்
பாதகங்கள் தேய்ந்தாலும்
பத்து ரூபாய்தான்

கேட்டாலும் கிடைக்காது
எடுத்தவன் உயிர் இருக்காது

இறக்கி வைத்தோம்
மாடிகளை
தாடிகள்தான்
எங்கள் சொத்து

உழுது விளைத்தோம்
உணவுகளை
பட்டினிதான்
எங்கள் சொத்து

நெய்து கொடுத்தோம்
ஆடைகளை
கிழிசல்கள்தான்
எங்கள் சொத்து

சுதந்திர வாசம்
இங்கு இல்லை
சாக்கடை நாற்றங்க்களே
நாங்கள் அறிவோம்

சுதந்திர மெத்தை
இங்கு இல்லை
சாணித் தரைகளே
எங்கள் கனவு

கல்வி கொள்ள ஆசைதான்
காசு பணம் இல்லையே
நெல்லுச்சோறு கனவுதான்
நேரம் அமையவில்லையே

இருட்டில் வாங்கியதை
பிரித்து கொண்டார்கள்
எங்களுக்கு தெரியாமல்
சுதந்திரம் என்பதை
காதில் சொன்னார்கள்
கண்ணில் காட்டாமல்

எழ நினைத்தோம்
காலில் அடி
உரிமை கேட்டோம்
உடலில் ரத்தம்
அழ நினைத்தோம்
கண்ணீர்த்துளி ...

சுதந்திரம் கிடைத்தது
"சத்தமில்லாமல் அழ"...

2 கருத்துகள்:

SHALINIPRIYAN சொன்னது…

நீங்க சொல்றதை பார்த்த எழைங்கேல்லாம் நல்லவங்க மாதிரியில்ல தெரியுது
ஆனா உங்க கவிதை நல்லா இருக்கு

M.Thevesh சொன்னது…

மிக அருமையான கவிதை
உண்மையைக்கூறும் முறை
என்னைக்கவர்ந்தது

கருத்துரையிடுக